அனைத்து வாக்குச் சாவடி மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு வீடியோ பதிவு செய்து ஆவணப்படுத்த வேண்டும் என அதிமுக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கின்றது. இந்த தேர்தலில் அனைத்து வாக்குச் சாவடிகள் மட்டும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என அதிமுக சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து சட்டப்பேரவை உறுப்பினர் உறுப்பினரும் அதிமுக திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளருமான திரு.ஜெயராமன் மாவட்ட ஆட்சியர் எஸ். வினித் அவர்களிடம் கடந்த வியாழக்கிழமை அன்று மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது “திருப்பூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது வாக்குப்பதிவு நடைபெறும் பிப்ரவரி 19ஆம் தேதியும் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கும் பிப்ரவரி 22ஆம் தேதியும் அனைத்து வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு வீடியோ பதிவு செய்து ஆவணப்படுத்த வேண்டும். ஏனென்றால் ஆளும் திமுக கட்சியை சேர்ந்த சில நபர்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் தகராறில் ஈடுபட்டு முடிவை தங்களுக்கு சாதகமாக்க போவதாக தெரிவித்து வருகின்றனர். ஆகையால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்கு சாவடி மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் தகுந்த பாதுகாப்பு கொடுத்தும் அதனை வீடியோ பதிவு செய்தும் ஆவணப்படுத்த வேண்டும்” என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது