கடந்த 2008 ஆம் ஆண்டு ஜூலை 26-ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல்வேறு இடங்களில் 1 மணி நேரத்தில் 21 குண்டுகள் வெடித்தது. இந்த தொடர் குண்டு வெடிப்பில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடந்த ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்கு பழி வாங்கும் வகையில் இந்திய முஜாஹிதீன் பயங்கரவாதிகள் குண்டு வெடிப்பு தாக்குதலை நிகழ்த்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து மொத்தம் 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அப்போது இந்திய முஜாஹிதீன் அமைப்புடன் தொடர்புடைய 82 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 77 பேருக்கு எதிராக அகமதாபாத் சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது. இதையடுத்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இவ்வழக்கில் இருந்து 28 பேரை விடுவித்தும், 49 பேரை குற்றவாளிகளாக அறிவித்தும் நீதிபதி ஏ.ஆர்.பட்டேல் தீர்ப்பு வழங்கினார். இந்நிலையில் இன்று (பிப்..18) மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் 38 பேருக்கு மரண தண்டனையும், 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.