மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கனநீர் ஆலை குடியிருப்பு பகுதிகளில் அப்பாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசாங்க நிறுவனமான சிர்கோனியம் தொழிற்சாலையில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் தொழிற்சாலைக்கு இரவு பணிக்காக சென்றுள்ளார். இந்நிலையில் 12.30 மணியளவில் குழந்தைக்கு உடல் நலம் சரியில்லை என்று மனைவியிடம் இருந்து தகவல் வந்துள்ளது. இதனால் அப்பாஸ் நிறுவனத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இவர் பொட்டல்காடு விளக்கு பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியே வேகமாக வந்த வேன் ஒன்று அப்பாசின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அப்பாஸை அக்கம்பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அப்பாஸ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து முத்தையாபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் முத்தையாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வேன் ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.