தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடியாக செயல்படும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழகத்தில் வரும் 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் அன்றைய தினம் விடுமுறை அளிக்கப்படுகிறது.
பிப்.,18 ஆம் தேதி தேர்தல் பயிற்சியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை தவிர பிற ஆசிரியர்களை கொண்டு பள்ளிகள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தால் அந்த பள்ளிகளுக்கு பிப்.,18-ம் தேதியும் விடுமுறை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடியாக செயல்படும் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை (18.02.2022) விடுமுறை அளித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பூபதி அறிவித்துள்ளார்.
அதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, அம்மாவட்டத்தில் உள்ள சில கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் உத்தரவிட்டுள்ளார். அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் 19.02.2022 அன்று வாக்குப்பதிவு நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் 18.02.2022 மற்றும் 19.02.2022 ஆகிய 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
இதையடுத்து வாக்குப்பதிவிற்கு பின்னர் வாக்கு எண்ணிக்கை மேற்கொள்வதற்காக நாமக்கல்லில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, ராசிபுரத்தில் உள்ள எஸ்.ஆர்.வி.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்செங்கோட்டில் உள்ள விவேகானந்தா பெண்கள் கல்லூரி ஆகிய வாக்கு எண்ணும் மையங்களுக்கு 18.02.2022 முதல் 22.02.2022 வரை உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து வாக்குச்சாவடியாக செயல்படும் பள்ளிகளுக்கான விடுமுறை அறிவிப்பை பிறமாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட நிர்வாகம் வெளியிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.