செல்போனில் கேம் விளையாடியதை கண்டித்த ஆசிரியரை மாணவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தேவகோட்டை பகுதியை சேர்ந்த 18 வயது மாணவர் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் காரைக்குடியை சேர்ந்த ராஜா ஆனந்த் என்பவர் ஓவிய ஆசிரியராக வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் ராஜா ஆனந்த் வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்த போது அதனை கவனிக்காமல் அந்த மாணவர் செல்போனில் விளையாடியுள்ளார். இதனை பார்த்த ராஜா மாணவரை கண்டித்தும் அவர் தொடர்ந்து செல்போனில் விளையாடியுள்ளார். இதுகுறித்து ஆசிரியர் தொழில் பயிற்சி நிலைய முதல்வரிடம் புகார் அளித்துள்ளார்.
இதனால் முதல்வர் மாணவரை அழைத்து பெற்றோரை அழைத்து வருமாறு தெரிவித்துள்ளார். இதனையடுத்து தொழிற்பயிற்சி நிலையத்திற்கு வந்த மாணவரின் தாயாரிடம் ஆசிரியரும், முதல்வரும் சேர்ந்து உங்களது மகன் பாடங்களை கவனிக்காமல் செல்போனில் விளையாடிக் கொண்டிருக்கிறான். இதனால் மற்ற மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதால் மாற்று சான்றிதழ் வாங்கி சென்று விடுங்கள் என தெரிவித்துள்ளனர். அப்போது தனது மகனை கண்டிப்பதாக மாணவரின் தாயார் தெரிவித்துள்ளார். அதன்பிறகு இனி தவறு செய்தால் மன்னிக்க மாட்டோம் எனக்கூறி மாணவனை வகுப்பறைக்குள் அனுமதித்தனர்.
இந்நிலையில் நேற்று காலை வகுப்பறையில் ஆசிரியர் தனியாக இருந்த சமயத்தில் அங்கு சென்ற மாணவர் நான் தவறாக நடந்து கொண்டேன் என்னை மன்னித்து விடுங்கள் என கூறியுள்ளான். அப்போது எதுவாக இருந்தாலும் முதல்வரிடம் சென்று பேசுமாறு ராஜா கூறியுள்ளார. இதனால் கோபமடைந்த மாணவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆசிரியரை சரமாரியாக குத்தியுள்ளார். ஆசிரியரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த மாணவர்களும், பிற ஆசிரியர்களும் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாணவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.