கார் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை மற்றும் அவரது தாய் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சுந்தராபுரம் பகுதியில் பிரசாத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சுவாதி என்ற பெண்ணுடன் பிரசாத்துக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மறுவீட்டு அழைப்புக்காக பிரசாத், சுவாதி, பிரசாத்தின் தந்தை சவுடையன், தாய் மஞ்சுளா ஆகிய 4 பேரும் ஒரே காரில் தேனி மாவட்டம் நோக்கி புறப்பட்டனர். மற்றொரு காரில் உறவினர்கள் வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் சுந்தராபுரம் சிட்கோ பாலத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த டிப்பர் லாரி கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பிரசாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
அதன்பின் படுகாயமடைந்த 3 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே மஞ்சுளா பரிதாபமாக இறந்துவிட்டார். அதன்பின் சவுடையன் மற்றும் சுவாதி ஆகியோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரசாத் மற்றும் மஞ்சுளா ஆகியோரின் சடலங்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் ஏற்படுத்திய லாரி ஓட்டுநரான ஆறுமுகம் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.