தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவலின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி கடந்த 1-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விரைவில் பாடங்களை நடத்தி முடிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் வருகின்ற 19-ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து வருகின்ற 22-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் இடங்களில் வாக்குபதிவு நாளான பிப்ரவரி 19 மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான பிப்ரவரி 22 ஆகிய தேதிகளில் அனைத்து பள்ளிகளுக்கும் 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தலுக்கு முந்தைய நாளான பிப்ரவரி 18-ஆம் தேதி அன்று 50%-க்கும் அதிகமான ஆசிரியர்கள் தேர்தல் பணிக்கு சென்றால் அன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை என்று அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.