தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு தனது ட்விட்டர் பக்கத்தில் நானே வருவேன் படத்தை பற்றி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
கடந்த ஒரு மாதமாக நடிகர் தனுஷ் தொடர்ந்து செய்திகளில் அடிபட்டு வருகிறார். இவர் கடந்த மாதம் ஜனவரி 17-ஆம் தேதி தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அப்போதிலிருந்து அவரை சுற்றிய செய்திகள் வெளிவந்தன வண்ணம் உள்ளது. இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத தனுஷ் தனது படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் ஹைதராபாத்தில் கடந்த சில நாட்களாக இருந்த தனுஷ் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே ஒருவன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஊட்டியில் நடைபெறுகிறது.
இந்த செய்தியை இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் “அசுரன், கர்ணன் வரிசையில் ‘நானே வருவேன்’ நீங்கள் கொண்டாடும் வகையில் திரையரங்கில் தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் பிரமாண்ட படைப்பு விரைவில் வெள்ளித்திரையில்..” என பதிவிட்டுள்ளார். இதைதொடர்ந்து தனுஷும் செல்வராகவனும் இணைந்திருக்கும் போட்டோவும் கலைபுலி எஸ் தாணு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் நடிகர் தனுஷ், மாறன், வாத்தி, திருச்சிற்றம்பலம் என அடுத்தடுத்து தமிழ் படங்களில் பிசியாக உள்ளார். இதனைத் தொடர்ந்து அடுத்த இரண்டு பாலிவுட் படங்களிலும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.