இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே மோதல்கள் நீடித்து துப்பாக்கி சூடு நடத்தியதில் 17 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
பல ஆண்டுகளாக இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே மோதல்கள் நீடித்து வருகிறது. தற்போது ஜெருசலேம் மேற்கு கரை பகுதியில் பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த ஆண்டு இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்கு கரை பகுதியில் உள்ள ஜெனின் நகரில் இஸ்ரேல் ராணுவ வீரரை சுட்டு கொன்றுள்ளனர். இதனால் குற்றம் சாட்டப்பட்ட பாலஸ்தீன வாலிபரின் வீட்டை இடிப்பதற்காக இஸ்ரேல் வீரர்கள் ராணுவ வாகனங்களுடன் சென்றுள்ளனர். இதனையடுத்து இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கு எதிராக பாலஸ்தீனர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து இஸ்ரேலின் வீரர்கள் அவர்களை விரட்டியடிக்க ரப்பர் குண்டுகளால் சுட்டுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் அதிகமாகி பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் வீரர்கள் மீது கற்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் இஸ்ரேல் வீரர்கள் பாலஸ்தீனர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் 17 வயது சிறுவனின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைக்கப்பட்டது. இதனால் அச்சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இந்த துப்பாக்கி சூட்டில் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.