குடிபோதையில் தகராறு செய்தவரை தட்டிக்கேட்ட தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளலூர் அருகிலுள்ள கோண வாய்க்கால் பகுதியை சேர்ந்த கந்தசாமி. கட்டிட தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த டேவிட் ராஜா அந்த வழியாகசென்ற பொதுமக்களிடம் குடிபோதையில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அதைக்கண்ட கந்தசாமி, டேவிட் ராஜாவிடம் எதற்கு சாலையில் செல்பவரிடம் தகராறு செய்து கொண்டிருக்கிறாய் என்று தட்டிக் கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் பேச்சுவார்த்தை முற்றியதால் ஆத்திரம் அடைந்த டேவிட் ராஜா அருகில் இருந்த கட்டையால் கந்தசாமியின் தலையில் சரமாரியாக தாக்கினார்.
இதனால் பலத்த காயமடைந்த கந்தசாமி துடிதுடித்து கீழே மயங்கி விழுந்தார். அதைக் கண்ட பொதுமக்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். இதுகுறித்து தகவலறித்த போத்தனூர் போலிசார் அங்கு விரைந்து வந்து கந்தசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குடிபோதையில் கொலை செய்த வாலிபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.