ஐபிஎல் கிரிக்கெட்டிற்கான மெகா ஏலம் கடந்த சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் நடைபெற்றது. இதில் தொடக்கத்தில் அமைதி காத்து வந்த மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி நேரத்தில் அதிரடியாக செயல்பட்டு வீரர்களை தட்டி தூக்கியுள்ளது. இதில் இளம் வீரர்களை டார்கெட் செய்த மும்பை அணி இடது கை சுழற்பந்து வீச்சாளர் சஞ்சய் யாதவை 50 லட்சத்திற்கு வாங்கியுள்ளது. மேலும் டேனியல் சாம்ஸ், டைமல் மில்ஸ் , திலக் வர்மா, பேசில் தம்பே, முருகன், அஸ்வின் போன்றோரையும் வாங்கியுள்ளது.
மேலும் சோப்ரா ஆச்சர் ஏலத்திற்கு வந்த போது இவரை வாங்க தொடர்ந்து ஆர்வம் காட்டியது. கடும் போட்டி இருந்த போதிலும் மும்பை இந்தியன்ஸ் அணி ஆச்சரை 8 கோடிக்கு வாங்கியுள்ளது. அந்த அணியில் ஜஸ்பிரித் பும்ரா இருக்கிறார். ஆச்சரும் இணைந்துள்ளதால் அந்த அணி பலமிக்க அணியாக மாறும். இதனால் ரசிகர்கள் அனைவரும் 15 வது சீசனை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.
சிங்கப்பூர் வீரர் டிம் டேவிட்டை 8.25 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது. இவரால் ஹார்த்திக் பாண்டியா போல் அதிரடியாக விளையாட முடியும் என்பதால் தான் கடும் போட்டி நிலவியது. இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் அமைதி காத்து கடைசி நேரத்தில் இளம் வீரர்களை வாங்கியதற்காக ரசிகர்கள் அனைவரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.