கடந்த ஆண்டு ஜனவரி மாதம் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் தான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றம் நாக்பூர் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குக்கான தீர்ப்பு நீதிபதி புஷ்பா கனேடிவாலாவால் வழங்கப்பட்டது. இந்த வழக்கில் பாலியல் நோக்கத்துடன் ஒருவரை தோலுடன் தோல் தொடர்பு கொண்டால் மட்டுமே அது பாலியல் வன்முறை ஆகும். விருப்பம் இல்லாத ஒருவரை வெறுமனே ஆடைக்கு மேல் தொட்டால் அது பாலியல் வன்முறை ஆகாது என தீர்ப்பளித்துள்ளார். இது மட்டுமல்லாது குழந்தைகள் மீதான வன்முறை தொடர்பான மற்றொரு வழக்கில் ஒருவர் குழந்தையின் கையை பிடிப்பதும் பேண்ட் ஜிப்பை அவிழ்ப்பதும் போக்சோ சட்டத்தின் கீழ் வராது என சர்ச்சைக்குரிய வகையில் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
மேலும் போக்சோ சட்ட பிரிவு 8 மற்றும் 10 ன் கீழ் 5 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க கூடிய ஒரு குற்றத்தை, பாலியல் துன்புறுத்தல் பிரிவு 12 ன் கீழ் மாற்றி 3 ஆண்டுகள் மட்டுமே சிறை தண்டனை கிடைக்கும் வகையில் செய்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் மனைவியிடம் வரதட்சணை கேட்பது துன்புறுத்தல் ஆகாது என மற்றொரு சர்ச்சையான தீர்ப்பையும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து மும்பை உயர்நீதிமன்றம் புஷ்பா கனேடிவாலாவை நிரந்தர நீதிபதியாக பரிந்துரைக்க வேண்டாம் என கூறியுள்ளது. இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி புஷ்பா கனேடிவாலா தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.