ஏ.டி.எமில் பணம் எடுத்து தருவதுபோல் நடித்து 32 ஆயிரம் ரூபாயை திருடி சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேருந்து நிலையம் அருகே அரசுடமையாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று விருதுநகரில் இருந்து கமுதிக்கு வந்த வசந்தா(42) என்ற பெண் பணம் எடுப்பதற்காக அந்த ஏ.டி.எம் மையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த வாலிபர் ஒருவரிடம் பணம் எடுக்க உதவி கேட்டுள்ளார்.
அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திகொண்ட வாலிபர் வசந்தாவிடம் இருந்து ஏ.டி.எம் கார்டை வாங்கி கொண்டு, தன்னிடம் இருந்த வேறு ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி அதில் பணம் வரவில்லை என நம்ப வைத்து வசந்தாவிடம் வேறொரு ஏ.டி.எம் கார்டை கொடுத்துள்ளார். இதனை நம்பிய வசந்தா அங்கிருந்து சென்றதும் அந்த வாலிபர் வசந்தாவின் ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி அதில் இருந்த 32 ஆயிரம் ரூபாயை எடுத்துகொண்டு தப்பியோடியுள்ளார்.
இதனையடுத்து வசந்தாவின் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக அவரது கணவர் தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த வசந்தா உடனடியாக இதுகுறித்து கமுதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து உதவி செய்ததாக நடித்து பணத்தை திருடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.