புதுச்சேரி உப்பளம் பகுதியில் பிராங்க்ளின் (59) என்பவர் வசித்து வருகிறார். இவர் பொதுப் பணித்துறையில் கட்டிட பணிகளை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து செய்து வந்தார். அ.தி.மு.க பிரமுகராக இருந்த இவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் தி.மு.க.வில் சேர்ந்தார். இந்த நிலையில் பிராங்க்ளின் வீட்டில் நேற்று மாலை வேளையில் மனைவி, மகள், பேரக்குழந்தைகள் இருந்தனர். ஆனால் பிளாங்க்ளின் வீட்டில் இல்லை. அப்போது பிராங்க்ளின் வீட்டின் அருகே ஸ்கூட்டரில் 2 பேர் வந்தனர்.
அதில் ஒரு நபர் தான் மறைத்து வைத்து இருந்த 2 நாட்டு வெடிகுண்டுகளை எடுத்து பிராங்க்ளினின் வீட்டின் மீது வீசினார். இதனால் வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் மர்மநபர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இதனிடையில் பிராங்க்ளின் வீட்டு கதவு மூடி இருந்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வெடிகுண்டு வீசியவர்களின் உருவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.