விவசாயியின் மகளை கிண்டல் செய்ததால் ஏற்பட்ட தகராறில் வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள மூங்கில்பட்டி கீழ்வாணி பகுதியில் விவசாயியான சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் மூங்கில் பட்டியில் இருக்கும் அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மாணவி பள்ளிக்கு சென்று வரும் போது அதே பகுதியில் வசிக்கும் கூலித் தொழிலாளியான வெங்கடேஷ் என்பவர் மாணவியை கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்த சரவணன், தனது அக்காள் சித்ராவுடன் வெங்கடேசனின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வெங்கடேசனின் தாய் லட்சுமி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். இதனால் அவரிடம் தனது மகளை கிண்டல் செய்தது குறித்து சரவணன் தட்டிக் கேட்டுள்ளார்.
அதன்பிறகு சரவணனும், சித்ராவும் வீட்டிற்கு சென்றுவிட்டனர். இதுகுறித்து அறிந்ததும் வெங்கடேஷ் தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து சரவணனின் வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதனால் படுகாயமடைந்த சரவணன் மற்றும் வெங்கடேஷ் ஆகிய இருவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி வெங்கடேஷ் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சரவணன் மற்றும் சித்ரா ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.