திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக உண்டியலில் செலுத்தும் பணம் மற்றும் தங்கம் உள்ளிட்ட ஆபரணங்கள் மாதம் ஒருமுறை உண்டியலில் இருந்து எடுக்கப்பட்டு எண்ணப்படுகிறது.
இதன்படி பிப்ரவரி மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோவில் இணை ஆணையர் அசோக்குமார் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இதில் கோவில் ஊழியர்களும், தன்னார்வலர்களும், பக்தர்களும் கலந்து கொண்டனர். நேற்று காலை தொடங்கிய இந்த பணி இரவு வரை நடைபெற்றது. முடிவில், உண்டியல் காணிக்கையாக ரூ.60 லட்சத்து 9 ஆயிரத்து 536 ரொக்கப்பணமும், 236 கிராம் தங்கம் மற்றும் 551 கிராம் வெள்ளி ஆகியவையும் காணிக்கையாக கிடைக்கப்பெற்றது.