லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக அரசு ஊழியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கரியமலை கிராமத்தில் விவசாயியான சுந்தர்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சுந்தர் ராஜ் தனது நிலம் தொடர்பான சிட்டாவில் பெயர் சேர்ப்பதற்காக கிராம நிர்வாக அலுவலர் லதா என்பவரிடம் விண்ணப்பித்துள்ளார். அப்போது 4,000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் சிட்டாவில் பெயர் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என லதா கூறியுள்ளார். இதுகுறித்து சுந்தர்ராஜ் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சுந்தர்ராஜ் லதாவிடம் வழங்கியுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் லதாவை கையும், களவுமாக பிடித்துவிட்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லதாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக அலுவலகத்தில் தீவிர சோதனை நடத்தியுள்ளனர்.