டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் மூலம் தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அரசு பதவிகளுக்கு ஏற்ப குரூப்-1, குரூப்-2, குரூப்-3, குரூப்-4 உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது. ஆனால் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக அனைத்து போட்டி தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் பிப்ரவரி, மார்ச் மாதத்தில் குரூப்-2 குரூப்-4 VAO தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான பாடத் திட்டங்களில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டது. அதன்படி தேர்வர்கள் அனைத்து போட்டித் தேர்வுக்கும் தமிழ் தாளில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எனவே தமிழ் தாளில் 40 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே தேர்வர்களின் அடுத்த தாள் மதிப்பீடு செய்யப்படும். இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படுமா ? அல்லது பழைய பாடத்திட்டத்தின்படி நடைபெறுமா ? என்பது குறித்து தேர்வர்கள் மத்தியில் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த குழப்பத்தை தீர்க்கும் வகையில் டிஎன்பிஎஸ்சி தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தற்போது குரூப்-2, குரூப்-2A, குரூப்-4 தேர்வுகளுக்கான பாடத் திட்டத்தை வெளியிட்டுள்ளது.