ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து முதியவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகத்திற்கு கையில் பையுடன் முதியவர் ஒருவர் சென்றுள்ளார். இந்த முதியவர் தான் கொண்டு வந்த மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் அந்த முதியவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் முதியவர் அய்யம்பாளையம் பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன் என்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் ராஜேந்திரனையும், அவரது குடும்பத்தினரையும் சிலர் கோவிலுக்குள் செல்ல விடாமல் தடுத்துள்ளனர். இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் தீக்குளிக்க முயன்றதாக ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் முதியவரை சமாதானப்படுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க செய்தனர். அதன் பிறகு மீண்டும் தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என முதியவரை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.