பள்ளியில் அரசு பாட புத்தகங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு,அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இலவச உடை,புத்தகம் ஆகியவை வழங்கி வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி வட்டம்,நல்லாபாளையம் என்ற பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஒன்று உள்ளது. இங்கு சின்னத்தம்பி என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த பள்ளியில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை மொத்தம் 187 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்தநிலையில் தலைமையாசிரியர் சின்னதம்பி தமிழக அரசு சார்பில் மாணவர்களுக்கு வழங்கும் நோட்டு புத்தகம், எழுதுபொருள், புத்தகப்பை உள்ளிட்ட விலையில்லாப் பொருள்களுக்கு பணம் வசூலிப்பதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து மாணவர்கள் பெற்றோரிடம் கூறி வந்த நிலையில், பெற்றோரும் ஊராட்சி மன்ற தலைவர் நித்யா கதிரவனிடம் இதுபற்றி கூறி முறையிட்டுள்ளனர்.
இதனால் ஊராட்சி மன்ற தலைவர் இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட ஆட்சியர் மற்றும் விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தி உள்ளிட்ட பலரிடம் பலமுறை புகார் கொடுத்தும், எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து ஊராட்சிமன்ற தலைவரே நேரடியாக பள்ளிக்கு சென்று, தலைமை ஆசிரியர் பள்ளி நேரங்களில் உறங்குவது, மாணவர்களிடம் பணம் பெறுவது உள்ளிட்ட செயல்களை தனது செல்போனில் வீடியோ எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளது பெரும் வைரலாகி வருகிறது.