ஜனவரி மாதத்தில் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்து வந்த கொரோனா மூன்றாவது அலை தாக்கம் இரவு நேர ஊரடங்கு, வார இறுதியில் முழு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு பிறகு ஓரளவு கட்டுக்குள் வந்தது. இதனால் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து பிப்ரவரி 22-ஆம் தேதி என்று வாக்கு எண்ணிக்கையும் மேற்கொள்ளப்பட உள்ளது.
எனவே அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் தேர்தலுக்கான பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மக்கள், அதிகரித்து வந்த கொரோனா மூன்றாவது அலை சில வாரங்களிலேயே வீழ்ச்சி அடைந்துவிட்டதாக கூறி அரசு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து பின்னர் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளதால் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறிவருகின்றனர்.
அதேபோல் தேர்தலை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்புகளை அரசு குறைத்து காட்டுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்த நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், கடலூர் மாவட்டத்தில் முதல் டோஸ் தடுப்பூசி 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 100 சதவீதம் என்ற அளவில் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் மக்கள் கொரோனா இரண்டாவது அலை தாக்கத்திற்கு பிறகு ஆர்வத்துடன் சென்று தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இதனால் தற்போது மூன்றாம் அலையின் தாக்கம் கட்டுக்குள் வந்துள்ளது. கொரோனா வைரஸை பொருத்தவரை அது வேகமாக பரவி குறையும் தன்மை கொண்டது. எனவே மக்கள் கொரோனா பாதிப்பு தான் குறைந்து விட்டதே என்று அலட்சியமாக இருக்காமல் அடுத்த சில வாரங்களுக்கு கவனமாக இருக்குமாறு எச்சரித்துள்ளார்.
இப்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக குறைத்து காட்டப்படுகிறதா ? என்று கேட்டால் தேர்தலுக்கும் நோய் தொற்று பாதிப்புக்கும் எந்த விதமான தொடர்பும் கிடையாது. தொற்று பாதிப்பு எண்ணிக்கையை மறைக்கவோ, குறைக்கவோ முடியாது. எனவே மக்கள் அரசு வெளியிட்டுள்ள முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக கொரோனா 2-வது அலை வேகமாக பரவியது. ஆனால் தேர்தல் சமயத்தில் எந்தவிதமான ஊரடங்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. ஆனால் தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனவே தற்போதும் தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா ? என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.