நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வழங்க கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் நீட்தேர்வு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் காலதாமதம் செய்து வந்த நிலையில், நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டிய தமிழக அரசின் சட்ட மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார்.
இந்நிலையில் நீட் விலக்கு மசோதா தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து தமிழக சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. அப்போது நீட் விலக்கு மசோதாவை தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் நீட் விலக்கு மசோதா நிறைவேறியது. பாஜக உறுப்பினர்கள் மட்டும் வெளிநடப்பு செய்தனர். பேரவையில் நிறைவேறிய நீட் விலக்கு மசோதா ஆளுநருக்கு இன்றே அனுப்பி வைக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
இந்நிலையில் நீட் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கும், முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் இடையில் மறைமுகமாக நடந்து வந்த சண்டை தற்போது வெட்ட வெளிச்சமாக மாறியுள்ளது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த தி.மு.க. மற்றும் கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் மோதல் போக்கை கடைபிடிக்கும் ஆளுநரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்க தொடங்கிவிட்டனர். விரைவில் ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி மத்திய அரசுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.