சீன நாட்டில் சந்திர புத்தாண்டானது முடிவடைந்து மக்கள் தாங்கள் பணியாற்றும் ஊர்களுக்கு திரும்புவதால் ரயில் மற்றும் விமான நிலையங்களில் அலைமோதும் அளவிற்கு கூட்டம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன நாட்டு மக்கள் சந்திர நாட்கையை வைத்து புதுவருடத்தை கொண்டாடுவார்கள். இதனைத்தொடர்ந்து இம்மாதம் முதல் தேதி புலி வருடம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. எனவே, கடந்த ஜனவரி 31 ஆம் தேதியிலிருந்து நேற்று வரை ஒரு வாரம் அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.
இதனால், சீன மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று குடும்பத்தாருடன் உற்சாகமாக புத்தாண்டை கொண்டாடினார்கள். இந்நிலையில் நேற்றுடன் புத்தாண்டு முடிவடைந்ததால் சொந்த ஊர்களிலிருந்து தாங்கள் பணிபுரியும் பகுதிகளுக்கு திரும்பி கொண்டிருக்கிறார்கள்.
லட்சக்கணக்கான மக்கள் இவ்வாறு செல்வதால் ரயில், பேருந்து மற்றும் விமான நிலையங்களில் அதிக மக்கள் கூட்டம் இருக்கிறது. நாட்டில் மொத்தமாக சுமார் 25 கோடி பேர் ரயில், பேருந்து மற்றும் விமானம் வழியாக பயணம் மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.