அன்று உள்ளாட்சித் தேர்தல் நடக்காமல் தடுத்தார்கள், இன்று வாக்கு எண்ணிக்கையை தடுக்கிறார்கள் என திமுக தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் மீது அமைச்சர் கருப்பணன் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
கோபிசெட்டிபாளையத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது:
உள்ளாட்சித் தேர்தல் முதல்கட்டமாக சிறப்பாக நடந்துவிட்டது. இரண்டாம்கட்ட தேர்தல் திங்கள்கிழமை (டிச30) நடக்கிறது. அந்தத் தேர்தலில் இரட்டை இலைக்கும் சுயேச்சைக்கும் வாக்களிக்க கேட்டுக் கொண்டுள்ளோம்.
இந்தத் தேர்தல் முடிவுகள் ஜனவரி 2ஆம் தேதி வெளியாக இருந்தது. மூன்று வருடமாக உள்ளாட்சித் தேர்தலைத் தடுத்தவர் ஸ்டாலின். தற்போது வாக்கு எண்ணிக்கையை தடுக்கிறார். வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்கள். மத்திய அரசு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மகுடத்தை சூட்டியுள்ளது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள நிர்வாகப் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. அந்தப் பட்டியலில் குஜராத்கூட ஆறாம் இடத்தில்தான் உள்ளது. அந்த அளவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறந்த ஆட்சியை அளித்துவருகிறார். வரும்காலங்களிலும் சிறப்பான ஆட்சியை அளிப்பார். 2021ஆம் சட்டப்பேரவைத் தேர்தலிலும் அவர்தான் மீண்டும் முதலமைச்சராக வருவார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக அமைச்சர் கருப்பணன் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பவானி ஒன்றியத்திற்குள்பட்ட ஆவரங்காட்டூர் புலுவபட்டி அய்யம்பாளையம் பனங்காட்டூர் நல்லிக்கவுண்டனூர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் இரண்டாம்கட்ட உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு பத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் திறந்த வாகனத்தில் நின்றபடி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை நிறுத்திவைக்க வேண்டும் எனத் தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை (டிச30) விசாரணைக்கு வருகிறது.