ஆளுநரை திரும்ப பெற போராட்டம் நடத்திய பின்பு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், தமிழ்நாட்டில் இருக்கின்ற 8 கோடி மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற…. உலகம் முழுவதும் வாழ்கின்ற 12 கோடி தமிழ் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கின்ற தமிழக சட்டமன்றம் இயற்றிய நீட் விலக்கு மசோதாவை 142 நாட்கள் கிடப்பில் போட்டுவைத்து,
ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்காமலும், ஒன்றிய அரசின் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமலும், தமிழக ஆளுநர் அவர்கள் தான் தோன்றி தனமாக இந்திய அரசியல் சட்டத்தை மதிக்காமல் திருப்பி அனுப்பியதை கண்டித்தும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காமலும், 8 கோடி மக்களை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற தமிழக சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றிய,
நீட் விலக்கு சட்ட மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக இந்த மாபெரும் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது.
ஏழை எளிய – கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மாணவ செல்வங்கள் 12 ஆண்டுகள் தங்கள் படித்த கல்வியை குறித்து எந்தவித அக்கறையும் கொள்ளாமல் நீட் என்கின்ற ஒரு தேர்வை கொண்டு வந்து திணித்து, அந்த நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டும் தான் நீங்கள் மருத்துவராக முடியும் என்று எங்கள் மீது திணிக்கின்ற ஒன்றிய அரசின் இந்த நீட் சட்டத்தை முற்றும் முதலுமாக எதிர்த்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராடிக்கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து அரசியல் கட்சிகளும்….. பாரதிய ஜனதா கட்சி தவிர…. அனைத்து அரசியல் கட்சிகளும் நீட் விலக்கு பெற வேண்டும் என்று சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றிய அனுப்பி வைக்கப்பட்ட அந்த சட்ட மசோதாவை கருத்தில் கொள்ளாமல், உண்மைக்கு மாறான தகவல்களை சொல்லி, தமிழக ஆளுநர் அவர்கள் திருப்பி அனுப்பியதை ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழக முதல்வர் அவர்கள் அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுத்த முடிவின் பிரகாரம் மீண்டும் சட்டமன்றத்தைக் கூட்டி…. மீண்டும் தமிழக ஆளுநர் அனுப்பிய நீட் விளக்கம் மசோதாவை குறித்து, விரிவாக விவாதித்து…… மீண்டும் தமிழக ஆளுநருக்கே அனுப்பி வைக்கும் என்ற முடிவையும் தமிழக வாழ்வுரிமை கட்சி வரவேற்கிறது. அதற்காக தமிழக முதலமைச்சர் உடனடியாக எதிர்வினை ஆற்றியதற்காக முதல்-அமைச்சருக்கு தனது நெஞ்சார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறது.
அந்த வகையில் தமிழக ஆளுநரை தமிழ் மக்களின் உணர்வுகளுக்கும், உணர்ச்சிகளுக்கும், கல்வி உரிமைகளுக்கும், இட ஒதுக்கீடு உரிமைகளுக்கும் எதிராக இருக்கின்ற, ஆர்எஸ்எஸ் பின்புலத்தைக் கொண்ட தமிழக ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி, இந்த ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும். இந்த மாபெரும் முற்றுகைப் போராட்டத்தை நாங்கள் நடத்துகிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன் என கூறினார்.