கிராமத்திற்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் இரவு நேரத்தில் காட்டு யானைகள் வனப் பகுதியில் இருந்து வெளியேறி கெட்டவாடி கிராமத்திற்குள் நுழைந்துவிட்டது. அதன்பின் விவசாயியான இளங்கோ என்பவரது தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் கரும்புகளை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தியுள்ளது. மேலும் காட்டு யானை இளங்கோ வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் முன்பக்க கண்ணாடியை அடித்து நொறுக்கியது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், தீப்பந்தம் கொளுத்தியும் சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். யானைகள் அட்டகாசம் செய்ததால் 1/2 ஏக்கர் பரப்பளவில் இருந்த கரும்புகள் சேதமடைந்து விட்டது. எனவே அதற்குரிய இழப்பீடு தொகையை வனத்துறையினர் தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.