அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர் செல்வத்திற்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி கொடுத்திருக்கிறார்.
அமைச்சர் துரைமுருகன் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, மத்திய அரசு கடந்த 2010ஆம் வருடத்தில் நீட் தேர்வை அறிமுகப்படுத்தியது. அப்போது காங்கிரஸுக்கு கொடுத்த ஆதரவை திமுக விலக்கியிருந்தால் இன்று நீட் தேர்வு வந்திருக்குமா? என்று ஓ பன்னீர்செல்வம் கேட்டிருக்கிறார்.
கூவத்தூர் கொண்டாட்டத்திற்கு பின் நடந்த அதிமுக ஆட்சியில் நீட் தேர்வை கொண்டு வந்து மாணவர்கள் தற்கொலை செய்ய காரணமான அதிமுக ஆட்சியின் துணை முதல்வராக இருந்த அவர் இதனை தெரிவித்திருப்பது தான் வேடிக்கையாக இருக்கிறது. திரும்பத் திரும்ப பொய்யை கூறி மக்களை ஏமாற்ற நினைக்கும் பன்னீர்செல்வத்தின் செயல் கண்டிக்கக்கூடியது.
திமுகவின் ஆட்சி நடந்த சமயத்தில் தான், அதிலும் கருணாநிதி முதலமைச்சராக இருந்த சமயத்தில்தான் நீட்தேர்வு தடுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் திமுக, ஆட்சி செய்தவரை நீட் இல்லை கடந்த 18-7-2013 அன்று நீட் தேர்வு செல்லுபடியாகாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. எனவே, திமுக-காங்கிரஸ் ஆட்சியில் நீட் தேர்வானது ஒழிக்கப்பட்டுவிட்டது.
அன்றாட அரசியலை கவனத்தில் கொள்ளாமல், ஆட்சியை தக்க வைத்தால் போதும் என்று இருந்த அதிமுகவிற்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நீட் தேர்வு இனிமேல் கிடையாது என்ற நிலைப்பாட்டில் தான் அதிமுக ஆட்சியில் அமர்ந்தது. உச்சநீதிமன்றத்திற்கு ஓடிச்சென்று நீட் தேர்வு செல்லுபடியாகாது என்ற ஆணையை திரும்பப் பெற வைத்தது, எந்த ஆட்சி?
ஓ.பன்னீர்செல்வம் வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கும் பாஜகதான் என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும் அதிமுக-பாஜக இணைந்து நீட் தேர்வை நடத்தி அதற்குரிய நீட் மசோதாவையும் கிடப்பில் போட்டு வைத்து நாடகம் நடத்திவிட்டு, இன்று எதிர்க் கட்சியாக அதிமுகவும், மத்திய அரசாக பாஜகவும் இருந்துகொண்டு தற்போது கூச்சமில்லாமல் அதையே தொடர்ந்து கொண்டிருக்கின்றது என்று கூறியிருக்கிறார்.