பொதுமக்களுக்கு வீடு கட்டித்தருவதாக கூறி அவர்களிடம் மோசடியில் ஈடுபட்ட இந்தி நடிகை திஷா சவுத்ரி இரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
பாலிவுட் நடிகை திஷா சவுத்ரி தனது கணவர் சச்சின் நாயக்குடன் இணைந்து பெங்களூருவில் ட்ரீம் இன்ப்ரா இந்தியா லிமிடெட் என்ற பெயரில் கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். இந்த நிறுவனம் சார்பில் வீடு கட்டித்தருவதாக விளம்பரம் செய்துள்ளார். இதை நம்பி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 3 ஆயிரத்து 700-க்கும் மேற்பட்ட மக்கள் 5,375 கோடிக்கு மேல் பணம் செலுத்தியுள்ளனர்.
ஆனால் உறுதி அளித்தபடி இவர் வீடு கட்டி தராததால் பொதுமக்கள் அனைவரும் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். அதன்படி, திஷா சவுத்ரி மீது பல்வேறு காவல் நிலையங்களில் 82 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் கடந்த 2017 ஆம் ஆண்டு திஷா சவுத்ரி, அவரது கணவர் சச்சின் நாயக், இவர்களது கூட்டாளி அனுப் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

காவல்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து திஷா சவுத்ரிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. பிறகு தலைமறைவான அவர் நீதிமன்ற விசாரணையிலும் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இந்நிலையில் அவர் மும்பையில் பதுங்கி இருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததின் அடிப்படையில் மும்பை சிஐடி நிதிக் குற்றப்பிரிவு காவல்துறையினர் நடிகை திஷா சவுத்ரியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதையடுத்து காசோலை பவுன்ஸ் வழக்கு தொடர்பாக பெல்லாரியில் உள்ள சி.சி.எச் நீதிமன்றத்தில் ஆஜரான திஷா, யாரிடமும் அநீதி இழைக்க மாட்டேன் என்று உறுதியளித்து, அனைவருக்கும் பணத்தை தருவதாக உறுதியளித்தார்.