மக்களவையில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் ராகுல்காந்தி உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது, “ஜனாதிபதி உரையில் எந்த பிரச்சனையும் பற்றி ஆழமாக குறிப்பிடவில்லை. குறிப்பாக இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் நிலவி வருகிறது. கடந்த 50 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு தற்போது வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது. அதைப்பற்றி ஜனாதிபதி உரையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
அதோடு தமிழகத்தில் நீட் விவகாரத்தில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. அதற்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. இந்தியாவில் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களின் அதிகாரமும் பறிக்கப்பட்டு வருகிறது. மாநிலங்களின் அதிகாரம் கொஞ்சம் கொஞ்சமாக மத்திய அரசின் கைகளுக்கு செல்கிறது. இது மிகவும் கண்டிக்கப்பட கூடிய ஒரு விஷயம். ஏழைகளுக்கு ஒரு இந்தியா பணக்காரர்களுக்கு ஒரு இந்தியா என மாறிவிட்டது. அதோடு இவ்விரண்டுக்கும் இடைவெளி அதிகரித்துக் கொண்டே செல்கிறது.” இவ்வாறு அவர் கூறினார்.