தமிழகத்தின் பல்வேறு பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் ஆள் மாறாட்டம் நடைபெற்றுள்ளது. எனவே இது தொடர்பான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக வருவாய்த்துறையினர் பத்திர பதிவின் போது சம்பந்தப்பட்ட இடம் யாருடையது ? என்பதற்கான சான்றை பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
அதோடு மட்டுமில்லாமல் ரேஷன் கடைகளில் உள்ளது போல் ஆள்மாறாட்டத்தை தடுப்பதற்காக ஆதாருடன் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் பதிவை சரிபார்க்க வேண்டும். தற்போது பதிவுத்துறை இதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதுகுறித்து பதிவுத்துறை அதிகாரிகள் கூறுகையில், “ஆள்மாறாட்டத்தை தடுக்கவே பத்திரப் பதிவின் போது இந்த நடைமுறை அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கனவே 209 பதிவு அலுவலகங்களில் கடந்த ஆண்டில் ஆதார் வழி அங்கீகாரம் பெறும் முறை விருப்ப அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டது.
இது தற்போது திருநெல்வேலி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சொத்தை எழுதிக் கொடுப்பவர் மற்றும் எழுதி வாங்குபவர், சாட்சிகள் 2 பேர் என அனைவரது ஆதார் எண்ணையும் பத்திர பதிவின் போது கொடுக்க வேண்டும். பின்னர் விரல் ரேகை பதிவு முதலில் சரிபார்க்கப்படும். இதையடுத்து ஆதார் இணையத்திலிருந்து அங்கீகாரம் வந்ததும் பத்திரப் பதிவு நடைபெறும். இதன் மூலம் பத்திரப்பதிவில் ஆள்மாறாட்டம் நடைபெறுவதை முற்றிலுமாக தவிர்க்க முடியும்” என்று தெரிவித்துள்ளனர்.