மத்திய அரசிற்கு அதிக அழுத்தம் கொடுத்து தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கை கடற்படை இதற்கு முன்பே 60-க்கும் அதிகமான தமிழக மீனவர்களை சிறைப் பிடித்தது. தற்போது, அவர்கள் விடுவிக்கப்பட இருக்கும் நிலையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை சிறை பிடித்திருக்கிறது.
இலங்கை கடற்படையின் இந்த செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது. இந்தியாவை சேர்ந்த 21 மீனவர்களும், அவர்களின் விசைப்படகுகளும் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து அவர்கள் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருக்கிறார்கள்.
எனவே, அவர்களை வரும் 7ஆம் தேதி வரை சிறையில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்நிலையில் இவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பில் முதல்வர், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பியிருந்தாலும், தொடர்ச்சியாக தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவதும், சிறை பிடிப்பதும் படகுகளை ஆக்கிரமிப்பதும் மீனவர்களிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விடுமோ? என்ற மிகப்பெரிய கவலை இருக்கிறது. இவ்வாறான நிகழ்வுகள் மீண்டும் நடக்கக்கூடாது. எனவே மத்திய அரசின் உதவியோடு இதில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் ஆலோசித்து, நிரந்தரமான முடிவு எடுக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மீனவ மக்களிடையே இருக்கிறது.
எனவே, முதல்வர் இது தொடர்பில் மத்திய அரசுடன் ஆலோசனை செய்து, அழுத்தம் கொடுத்து இதற்கு தரமான தீர்வு காண வேண்டும். மீனவர்கள் 21 பேரும் அவர்களின் விசைப்படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மீனவர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.