தமிழகத்தில் கொரோனா 3-வது அலை காரணமாக கிட்டத்தட்ட ஒன்றரை மாதமாக மூடப்பட்ட பள்ளிகள் நேற்று முன்தினம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. முதற் கட்டமாக பொதுத்தேர்வு எழுதவுள்ள 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 1-12 வகுப்புகள் வரை அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதனிடையில் பள்ளிகளை திறந்து மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை நடத்துவதா அல்லது வீட்டில் இருக்க சொல்லி ஆன்லைன் வகுப்புகளை தொடர்வதா, பள்ளி நேரடி வகுப்புகளை வழக்கம்போல் முழு நேரம் நடத்துவதா அல்லது சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்துவதா என்பது குறித்து அந்தந்த பள்ளி நிர்வாகங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித்துறை சமீபத்தில் அறிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தில் ஏராளமான தனியார் பள்ளிகளில் பொதுத் தேர்வு எழுதவுள்ள 10, 12 வகுப்பு மாணவர்களுக்கு அட்டவணைப்படி முழு நேரமும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இதையடுத்து பிற வகுப்பு மாணவர்களுக்கு 2 பேச்சுக்கலாக (Batch) தினசரி தலா 3 மணி நேரம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. முதல் Batch-க்கு காலை 8:30- 11:30 மணி வரையும், 2-வது Batch-க்கு 11.45 முதல் பிற்பகல் 2:45 மணி வரையிலும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. சென்னை ஆகிய பெருநகரங்களில் ஏராளமான பள்ளிகளில் இந்த நேர முறைப்படியே அன்றாடம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதில் முதல் Batch மாணவர்களுக்கு 11:30 மணிக்கே வகுப்புகள் முடிந்து விடுவதால், அவர்கள் வீட்டுக்கு போய் மதிய உணவை அருந்துவதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் 2-வது Batch மாணவர்கள் அன்றாடம் பள்ளி முடித்து வீடு திரும்பும்போது மாலை 3:30 ஆகி விடுவதாகவும், அவர்களுக்கு உணவு இடைவேளை வழங்கப்படாமல், 3 மணி நேரம் வகுப்புகள் நடத்தப்படுவதால் அவர்கள் தினசரி பசியுடனே வீடு வந்து, மதிய உணவு மாலை 4 மணிக்கு சாப்பிட வேண்டியுள்ளதாகவும் பெற்றோர் வேதனை தெரிவிக்கின்றனர்.
கொரோனா தொற்று பரவல் நடவடிக்கை காரணமாகவே மாணவர்களுக்கு Lunch break விடப்படுவதில்லை எனவும் சுழற்சி முறையில் தொடர்ந்து வகுப்புகள் இருப்பதால் உணவு இடைவேளை விடுவதில் நடைமுறை சிக்கல் இருப்பதாகவும் பள்ளி நிர்வாகங்கள் சொல்வதை ஏற்றுகொள்ள முடியாது. கொரோனா கட்டுப்பாடு வழிகாட்டுதல் வழிமுறைகளுடன் எப்படி வகுப்புகள் நடத்தப்படுகிறதோ, அதேபோன்று குறைந்தபட்சம் 20 நிமிிடங்களாவது மாணவர்களுக்கு கட்டாயம் Lunch break அளிக்கப்பட வேண்டும் என்பதே பெற்றோரின் கோரிக்கையாக இருக்கிறது.
கொரோனா மூன்றாவது அலையின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த போதே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழக்கம்போல் மதிய உணவு வழக்கப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் சில தனியார் பள்ளிகள் உணவு இடைவேளை இன்றி வகுப்புகளை நடத்தி, அன்றாடம் மாணவர்களை வருத்தி வருவது நகை முரணாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.