நண்பர்களுடன் குளத்திற்கு குளிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்துள்ள ஆனைமலையன்பட்டியில் தமிழ்ச்செல்வன் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். கோவை தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த இவர் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்றார். இந்நிலையில் சம்பவத்தன்று தமிழ்ச்செல்வன் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள குளத்திற்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது தமிழ்ச்செல்வன் ஆழமான பகுதிக்கு சென்றதால் திடீரென நீரில் மூழ்கியுள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் உடனடியாக அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் தமிழ்செல்வனை மீட்டு உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே தமிழ்ச்செல்வன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையறிந்த ராயப்பன்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தமிழ்செல்வனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.