மாநிலம் முழுவதும் கொரோனா 3-வது அலை பரவல் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால் தற்போது உள்ள கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த ஒடிசா அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து ஒடிசா அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, “இனி இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் நகர்ப்புறங்களில் இரவு 9 மணிக்கு பதிலாக இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை அமலில் இருக்கும். கொரோனா நெறிமுறைகளின்படி பக்தர்கள் அனுமதி இன்றி கோவில்களிலும், குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களை கொண்ட பள்ளிகளிலும் சரஸ்வதி பூஜை அனுமதிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் எந்தவொரு சமூக சரஸ்வதி பூஜைகளுக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் மகா சப்தமி அன்று நீராடுவதற்காக ஆற்றங்கரைகள், மலைத் தொடர்கள், குளங்கள் மற்றும் கடற்கரைகளில் பெரிய கூட்டங்களை உருவாக்கும் சபைகள் அனுமதிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடைகள், மால்கள், வணிக வளாகங்கள், சந்தைகள், திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு வளாகங்கள், தியேட்டர்கள், ஆடிட்டோரியங்கள், சட்டசபை அரங்குகள் அனைத்தும் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதன்பின் இரவு நேர ஊரடங்கு உத்தரவின்போது உணவகங்கள் மற்றும் ஆன்லைன் மூலமாக அவசர வீட்டு விநியோக சேவைகள் தொடரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மாநில அரசு அலுவலகங்கள், பொது நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள், சங்கங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளின் அனைத்து அலுவலகங்களும் கொரோனா நெறிமுறையை கண்டிப்பாக கடைபிடித்து 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.