தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று தற்போது வேகமாக பரவி வருகிறது. மேலும் கொரோனா 2-வது அலை பாதிப்பு அண்மையில் குறைந்து காணப்பட்ட நிலையில் தமிழகத்தில் மீண்டும் தொற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக 1-12 வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு வர வேண்டாம் என்று அரசு அறிவித்து இருந்தது. எனினும் ஜனவரி 31 ஆம் தேதி வரை ஆன்லைன் வகுப்புக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது. அதன்பின் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 1 -12 வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு ஜனவரி 30 ஆம் தேதி திடீரென்று அறிவித்தது.
இதற்கு முன்பு 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. 2 மாதங்கள் மட்டுமே நேரடி வகுப்புகளுக்கு சென்ற பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் நோய்த் தொற்று பாதிப்பால் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நேரடி வகுப்புகள் நடைபெறாத காரணத்தினால் மாணவர்களின் கற்றல் திறன் குறையும் என்று வருந்திய பெற்றோர்களுக்கு நேற்று பிப்ரவரி 1ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது சற்று ஆறுதல் அளித்தது. இந்நிலையில் தற்போது 1- 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக. இளைஞரணி தலைவரான அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உறுதி செய்யப்பட்டு வருவதால் பள்ளிக்கு செல்லும் தடுப்பூசி போடப்படாத மாணவர்களுக்கு நோய் தொற்று பரவக்கூடாது என்று தெரிவித்தார். அதன்பின் பொதுத்தேர்வு எழுதும் 10, 11, 12 போன்ற மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடக்கலாம். ஆனால் 1 -9 ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா 3வது அலை குறையும் வரை பள்ளிகள் திறக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.