குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் மொட்டனூத்து அருகே உள்ள ராமசந்திராபுரத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் ஆண்டிபட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் அப்பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக ராமசந்திராபுரத்தில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்தில் புகார் அளித்தும் இதுவரையிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் ராமசந்திராபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனையறிந்த ஆண்டிபட்டி துணை சூப்பிரண்டு அதிகாரி தங்ககிருஷ்ணன், ஒன்றிய வளர்ச்சி அலுவலர் ஆண்டாள் மற்றும் ஊராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மேலும் ராமச்சந்திராபுரத்திற்கு உடனடியாக குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று உறுதியளித்த பின்னரே பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.