ஆட்டோ-கார் நேருக்கு நேர் மோதியதில் காரின் சக்கரத்தில் சிக்கி ஆட்டோ டிரைவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அடுத்துள்ள டி. கிளியூர் பகுதியில் சித்திரவேலு என்பவர் வசித்து வந்துள்ளார். ஆட்டோ டிரைவரான இவர் சம்பவத்தன்று தனது ஆட்டோவில் கடம்பாகுடி அருகே உள்ள தொண்டி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கிருந்த பள்ளத்தில் இறங்கியபோது ஆட்டோ திடீரென கட்டுபாட்டை இழந்து எதிரே வந்த கார் மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் ஆட்டோ டிரைவர் சித்திரவேலு கார் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த காரில் இருந்த நபர்கள் உடனடியாக அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருவாடனை காவல்துறையினர் சித்திரவேலுவின் உடலை மீட்டு திருவாடனை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.