மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை போட்டு செல்வதற்காக புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுத்தமல்லி பகுதியில் வசிக்கும் பேச்சியம்மாள் என்பவர் தனது 3 வயது ஆண் குழந்தையுடன் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் வைத்து தனது உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் பேச்சியம்மாள் மீது தண்ணீரை ஊற்றி அவரை காப்பாற்றினர்.
இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பேச்சியம்மாள் கூறியதாவது, சுத்தமல்லியில் இருக்கும் எங்களது வீட்டிற்கு செல்லும் பாதையை பக்கத்து வீட்டுக்காரர் அடைத்து தகராறு செய்கிறார். எங்களது வீட்டை வாடகைக்கு விடக்கூடாது என மிரட்டியதோடு, என்னை அடித்து துன்புறுத்தி அவதூறாக பேசுகின்றனர். இதுகுறித்து சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தாலும், காவல்துறையினர் பக்கத்து வீட்டுக்காரருக்கு சாதகமாகவே செயல்படுகின்றனர். எனவே நான் தற்கொலை செய்து கொண்டால் அதற்கு பக்கத்து வீட்டுக்காரரும், சுத்தமல்லி காவல்துறையினரும் தான் காரணம் என பேச்சியம்மாள் கூறியுள்ளார்.
இதுகுறித்து விசாரணை நடத்த நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் படி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பேச்சியம்மாளுக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் தமிழ்செல்வி என்பவருக்கும் இடையே கழிவு நீர் குழாய் அமைப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்ட போது பேச்சியம்மாள் தனது உறவினரான மாரியம்மாள் என்பவருடன் இணைந்து தமிழ் செல்வியை அவதூறாக பேசி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
மேலும் அவரது வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள், கண்காணிப்பு கேமரா ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்தியுள்ளார். இதில் தன்னை நியாயப்படுத்திக் கொள்வதற்காகவே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று பேச்சியம்மாள் தீக்குளிக்க முயன்றது தெரியவந்துள்ளது. இது குறித்து தமிழ்ச்செல்வி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாரியம்மாள் மற்றும் பேச்சியம்மாள் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.