Categories
உலக செய்திகள்

இந்திய மீனவர்களை… சுட்டுக்கொன்ற கடற்படையினர்… “வழக்கை தள்ளுபடி செய்த கோர்ட்”… நடந்தது என்ன?

இத்தாலி நாட்டு நீதிமன்றம் இந்திய மீனவர்கள் இருவர் கொல்லப்பட்ட வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.

2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் நாள் 11 இந்திய மீனவர்கள் கேரளாவின் கொல்லம் மீன்பிடி துறைமுகத்துக்கு அருகே உள்ள இந்திய கடல் எல்லைக்குட்பட்ட பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக என்ரிகா  லாக்ஸி  என்ற இத்தாலி சரக்கு கப்பல் சென்றது. அதில் இத்தாலி கடற்படையை சேர்ந்த மசிமிலியானோ லதோர், சல்வடோர் கிரானே ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இவர்கள் இந்திய மீனவர்களை கடல் கொள்ளையர்கள் என்று சந்தேகித்து துப்பாக்கியால் சுட்டனர்.இத்துப்பாக்கிச் சூட்டில் அஜீஸ் பிங்க், ஜெலஸ்டின் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர் .மேலும் உடன் இருந்த 9 மீனவர்கள் காயமடைந்தனர். இவ்வழக்கில் இத்தாலி கடற்படை வீரர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்பின் பல சட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு இவர்கள் இத்தாலி திரும்பினர்.

இவ்வழக்கை சர்வதேச நீதிமன்றத்திற்கு இத்தாலி கொண்டுசென்று விசாரித்தது. இவ்வழக்கை விசாரித்த அந்நீதிமன்றம் இத்தாலி கடற்படை வீரர்கள், இந்திய மீனவர்களை சுட்டுக் கொன்றது பெரும் குற்றம் மற்றும் அதற்கான இழப்பீட்டை இத்தாலி அரசு வழங்க வேண்டும். மேலும் இவ்வழக்கை இத்தாலி நீதிமன்றத்தில் நடத்தலாம் என்றும்  உத்தரவிட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு அந்நாட்டு கடற்படை வீரர்கள் மீதான வழக்கை முடித்து வைக்குமாறு சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. இதன் மூலம் உயிரிழந்த இந்திய மீனவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக ரூ 10 கோடி வழங்குவதாக கூறியதை அவர்களும் சம்மதித்தனர். இதனையடுத்து கடந்த ஜூன் மாதம் சுப்ரீம் கோர்ட் இத்தாலி கடற்படை வீரர்கள் மீதான வழக்கை முடித்து வைத்தது. இந்நிலையில் போதிய ஆதாரம் ஏதுமில்லை எனக்கூறி இந்த கடற்படை வீரர்கள் மீதான கொலை வழக்கை அந்நாட்டு நீதிமன்றமும்  தள்ளுபடி செய்தது.

Categories

Tech |