கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் தமிழகத்தில் படிப்படியாக குறைந்து வருவதால் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கை ரத்து செய்துள்ளது. மேலும் மத வழிபாட்டுத்தலங்கள் திறப்பு, பள்ளிகள் திறப்பு போன்ற அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு ரத்து, இரவு நேர ஊரடங்கு ரத்து என அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளிலும் அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது.
அதன்படி பொதுமக்கள் சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் செல்ல அனுமதி வழங்கி மாநகராட்சி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இருப்பினும் கடற்கரைகளுக்கு செல்வோருக்கு சமூக இடைவெளி மற்றும் மாஸ்க் அணிதல் உள்ளிட்டவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. எனவே மக்கள் அதனை முறையாக பின்பற்றினால் மட்டுமே கொரோனா பரவலை முற்றிலுமாக தடுக்க முடியும் என்று அரசு தெரிவித்துள்ளது.