தமிழகத்தில் அரசுப் பணியாளர்கள் அகவிலைப்படி(DA) 01/01/2022 முதல் 17 சதவீதத்தில் இருந்து 31% ஆக உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இதனையடுத்து ரேஷன் கடையிலுள்ள ஊழியர்களுக்கும் DA உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்து வந்த நிலையில் இவர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தி வழங்குவதை நிறுத்தி வைக்குமாறு கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் ரேஷன் கடை ஊழியர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். இதனிடையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் துறை அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், “புதிய அடிப்படை ஊதியத்தில் 14 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படும்” என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஆண்டுதோறும் வழங்கவுள்ள அகவிலைப்படி உயர்வு தொடர்பாக அரசாணையில் வெளியிடப்படவில்லை. ஆகவே அரசிடம் இருந்து இந்த அகவிலைப்படி உயர்வு தொடர்பாக ஆணை வரும் வரையிலும் அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைக்குமாறு கூட்டுறவு சங்கங்களின் நுகர்வோர் பணிகளுக்கான கூடுதல் பதிவாளர் அருணா, அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
இதில் நீண்ட நாட்களாகவே எந்த உயர்வும் இன்றி பணியை மட்டும் ரேஷன் கடை ஊழியர்கள் செய்து வருகின்றனர். ஆகவே அரசு ஊழியர்களுக்கு இணையாக ரேஷன் கடை ஊழியர்களுக்கு இம்மாத சம்பளத்திலேயே DA உயர்த்தி வழங்க வேண்டும். இதனை முதல்வர் முக.ஸ்டாலின் உடனே கருத்தில் கொண்டு ரேஷன் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று அதிமுக சார்பாக வலியுறுத்துகிறேன் என்று ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.