திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான “முரசொலி” நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. அதாவது முரசொலியில் “கொக்கென்று நினைத்தாரோ தமிழக ஆளுநர் ரவி” என்ற தலைப்பில் தலையங்கம் தீட்டப்பட்டுள்ளது. மேலும் தமிழக ஆளுநராக பொறுப்பேற்றுள்ள ரவி அவருடைய அதிகார எல்லையை மீறி செயல்படுகிறாரோ ? என்ற எண்ணம் தோன்றுவதாக கூறப்படுகிறது.
அதோடு மட்டுமில்லாமல் நாகலாந்தில் ஆளுநர் ரவி பொறுப்பேற்று பணியாற்றிய போது நடந்து கொண்ட விவகாரங்கள் பெரும் சர்ச்சையை கிளப்பியது. தற்போது தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள இவர் நீட் விவகாரத்தில் ஒட்டுமொத்த தமிழகத்தின் உரிமை குரலுக்கு அங்கீகாரம் வாங்கி தர உரிய முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.
அதை விட்டுவிட்டு இங்கு பெரியண்ணன் என்ற மனப்பான்மையோடு அரசியல் செய்ய எண்ணினால் “கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா” என்ற பழங்கால மொழியை தான் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு நினைவுபடுத்த வேண்டி இருக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இது நீங்கள் நினைப்பது போல் நாகலாந்து கிடையாது, தமிழகம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.