இலங்கை, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவிற்கு வாய்ப்பு வழங்காதது குறித்து இந்திய தேர்வுக்குழுவிடம் ஹர்பஜன் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் மும்பை அணியின் நட்சத்திர வீரராக திகழும் சூர்யகுமார் யாதவ், தற்போது நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் இந்திய ஏ அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேசமயம், இலங்கை, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பு வழங்காதது குறித்து இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மற்றவர்களை போல சூர்யகுமார் யாதவ் ரன்கள் அடித்திருந்தும் இவர் இந்திய அணியைத் தவிர்த்து இந்தியா ஏ, இந்தியா பி போன்ற அணிகளில் தொடர்ந்து இடம்பெறுகிறார். ஏன் ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு விதிகளை பின்பற்றுகிறீர்கள். இவர் அப்படி என்ன தவறு செய்தார் என்பதைத்தான் யோசித்துகொண்டிரு்ககிறேன்” என பதிவிட்டுள்ளார்.
73 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள சூர்யகுமார் யாதவ் 13 சதங்கள் உட்பட 4,920 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல, 149 டி20 போட்டிகளில் பங்கேற்று ஆவரேஜ் 31.37 உடன் 3,012 ரன்களை அடித்துள்ளார். இதுமட்டுமின்றி, 85 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 1,548 ரன்களை எடுத்துள்ள அவர், சமீபத்தில் வதோதரா அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் 102 ரன்களை விளாசி மும்பை அணியை வெற்றிபெற செய்தார்.
இந்த நிலையில், இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி கவுகாத்தியில் தொடங்கவுள்ளது. அதேசமயம், இந்தியா ஏ – நியூசிலாந்து ஏ அணிகள் மோதும் முதல் அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டி ஜனவரி 22ஆம் தேதி லின்கன் நகரில் நடைபெறவுள்ளது.
I keep wondering what’s wrong @surya_14kumar hv done ? Apart from scoring runs like others who keep getting picked for Team india india/A india /B why different rules for different players ???
— Harbhajan Turbanator (@harbhajan_singh) December 24, 2019