புலி நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மசினகுடி பகுதியை சேர்ந்த 2 பேரை புலி கடித்து கொன்றது. அந்த புலியை 23 நாட்கள் போராட்டத்துக்கு பிறகு வனத்துறையினர் பிடித்தனர். இந்நிலையில் மாவனல்லா கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக புலி நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் புலி கால்நடைகளை அடித்து கொன்று வருவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும் எனவும், இரவு நேரத்தில் தனியாக நடந்து செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.