மகாராஷ்டிரா மாநிலம், சிஞ்சானி கடற்கரை அருகே உணவு கடையின் மீது கார் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜனவரி 26, இந்தியா முழுவதும் பொது விடுமுறை ஆகும். இந்த விடுமுறை நாளில் மகாராஷ்டிரா மாநிலம் தாராப்பூரில் உள்ள சிஞ்சானி கடற்கரையில் மக்கள் அதிக அளவில் வந்தனர். அதிக கூட்டத்தையும் பொருட்படுத்தாமல் காரொன்று கடற்கரைக்கு வந்தது. பின்னர் அந்த கார் இரு சக்கர வாகனங்களின் மீது மோதாமல் இருக்க வேண்டும் என்பதற்காக காரை வளைத்த போது திடீரென்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சென்று அங்குள்ள உணவகத்தின் மீது மோதியது. இதில் கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 5 பேர் இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்தவர்களை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர்களில் மூவர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு நீடித்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் நிலைய அதிகாரிகள் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்து, கார் ஓட்டுனரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.