தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேரடி வகுப்புகள் அனைத்தும் ரத்து செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஜனவரி 31 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையின் வளர்ச்சி மற்றும் பொதுத்தேர்வு ஏற்பாடுகள் குறித்த முதன்மைக் கல்வி அலுவலர்களின் ஆலோசனை கூட்டம் பிப்ரவரி 1 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இதில் பள்ளிகள் திறப்பு , ஆன்-லைன் வழி பாடங்கள், 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதத்தில் பள்ளிகளை திறக்க முதலமைச்சருக்கு பரிந்துரைத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார். அதனால் இன்னும் ஓரிரு நாட்களில் பள்ளி திறப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு பிப்ரவரி மாதம் பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.