மதுரையில் சர்க்கரை அளவை பரிசோதனை செய்யும் கருவியை அமேசானில் ஆர்டர் செய்த வாடிக்கையாளருக்கு சாக்லேட் டெலிவரி ஆன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை பசுமலை பகுதியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜெய்சிங் ராசையா வசித்து வருகிறார். இவருடைய மகன் அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது தந்தைக்காக வீட்டிலிருந்தபடியே ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை பரிசோதிக்கும் கருவியை அமேசான் ஆன்லைன் விற்பனை தளத்தில் 930 ரூபாய்க்கு ஆர்டர் செய்துள்ளார்.
இந்த ஆர்டர் நேற்று முந்தைய தினம் டெலிவரி ஆன நிலையில் ஜெய்சிங் ராசையா அந்த பார்சலை பிரித்து பார்த்துள்ளார். அப்போது சர்க்கரை அளவை பரிசோதனை செய்யும் கருவிக்கு பதிலாக 2 சாக்லேட் பாக்கெட்டுகள் இருந்ததால் அவர் அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக ஜெய்சிங் ராசையாவின் மகன் அமேசான் நிறுவனத்திடம் ஆன்லைனில் புகார் அளித்துள்ளார். ஆனால் அதற்கான பதில் எதுவும் வரவில்லை என்று கூறப்படுகிறது.