பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 ஆயிரம் கோழிகள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வேளாங்காடு தோண்டி கிணறு பகுதியில் விவசாயியான கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 20 வருடங்களாக இவர் தனது தோட்டத்தில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இந்நிலையில் கருப்பசாமி கோழிகளுக்கு தீவனம் மற்றும் தண்ணீர் வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து கோழிப்பண்ணையில் திடீரென இரவு நேரத்தில் தீ பிடித்தது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியவில்லை. அதற்குள் பண்ணை முழுவதும் தீ பரவியது.
இதுகுறித்து தகவலறிந்த அவினாசி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து 2 மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீயை முற்றிலுமாக அணைத்தனர். ஆனால் கொட்டகை முற்றிலும் சரிந்து கீழே விழுந்தது. இந்த தீ விபத்தில் பண்ணையில் இருந்த 3 ஆயிரம் கோழி கருகி இறந்தன. இதனால் அந்தப் பகுதி முழுவதும் கோழி கருகிய வாசம் வீசியது. இதுகுறித்து அவினாசி தீயணைப்புதுறையினர் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த அவினாசி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.