தென் ஆப்பிரிக்க நாட்டில் முதன் முறையாக கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்த உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் காரணமாக இந்தியாவில் 3- வது அலை வேகமாகப் பரவி வருகிறது.
இதனிடையில் கடந்த சில நாட்களுக்கு முன் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் ஜனவரி 10ஆம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் இருப்பவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் முன்களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் பூஸ்டர் டோஸ் போடப்படும் எனவும் அறிவித்தார்.
அதன்படி தமிழகம் உட்பட நாடு முழுவதும் கடந்த 10ஆம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் இருப்பவர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலமான இந்தூர் மாவட்ட ஆட்சியர் மணிஷ் சிங், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளாத அரசு ஊழியர்கள், முன்களப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கக் கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளார் .
இது தொடர்பாக இந்தூர் மாவட்ட ஆட்சியர் மணிஷ் சிங் கூறியிருப்பதாவது,
மாவட்டத்தில் கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளாத தகுதி வாய்ந்த முன்களப் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கக் கூடாது என கருவூல அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது. மேலும் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொண்ட முன்களப் பணியாளர்களுக்கு மட்டுமே ஊதியத்தை வழங்கும்படி தனியார் மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆகவே மருத்துவப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு, பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்பே சம்பளம் வழங்கப்படும்.