காவல்நிலையத்தில் சட்டக் கல்லூரி மாணவனுக்கு இழைக்கப்பட்ட அருவருக்கத்தக்க செயலை வன்மையாக கண்டிப்பதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
சரத்குமார் என்ன தான் அரசியலில் குதித்து இருந்தாலும் அவரை நடிகராக தான் பலர் தங்கள் மனதில் வைத்துள்ளனர். அரசியலில் இருக்குமிடம் தெரியாமல் இருக்கும் சரத்குமார் தேர்தல் நேரத்தில் மட்டும் தலை காட்டுவார். தேர்தல் வந்தால் போதும் சின்ராச கையிலேயே பிடிக்க முடியாது. அதிமுகவுடன் கூட்டணி அமைத்து எங்காவது சந்து பொந்துகளில் 2 தொகுதி வாங்கி அதில் போட்டியிடுவார். ஆரம்பத்தில் திமுகவுடன் கைகோர்த்து இருந்த சரத்குமார் பின்னர் அதிமுகவில் இணைந்தார்.தற்போது நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு மாறுதலுக்காக மக்கள் நீதி மையத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார் சரத்குமார். இந்நிலையில் தன்னை மக்கள் மறந்து விடக்கூடாது என்பதற்காகவும் நானும் இங்கு தான் இருக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்வதாகவும் அடிக்கடி ஏதாவது செய்தி வெளியிட்டு வருவார்.
அந்த வரிசையில் அவர் தற்போது வெளியிட்டுள்ள செய்தி பற்றி இந்த தொகுப்பில் காணலாம், “சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் அப்துல் ரஹீம் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது முகக்கவசம் அணிய வில்லை என போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளார். ஆனால் அந்த மாணவன் முக கவசம் அணிந்துள்ளார். இதனால் தான் அபராதம் செலுத்த மாட்டேன் என போலீசாரிடம் கூறியுள்ளார். ஆனால் தொடர்ந்து அபராதம் செலுத்த வற்புறுத்திய போலீசார் அந்த மாணவனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று நிர்வாணப்படுத்தி அவன் மீது சிறுநீர் கழித்து பல அருவருக்கத்தக்க செயல்களைச் செய்துள்ளனர்.
இதை கேட்டு நான் பதட்டம் அடைந்தேன் ஒரு சட்டக்கல்லூரி மாணவன் தன்னுடைய அடையாள அட்டையை காண்பித்த பிறகும் போலீசாரால் இவ்வாறு நடத்தப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். மேலும் போலீசார் இவ்வாறு சட்டத்தை கையில் எடுத்து அதிகார துஷ்பிரயோகம் செய்வது வன்மையாக கண்டிக்க கூடிய ஒரு விஷயம். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.